CHAT ROOM

Create a Meebo Chat Room

சுறா

இருப்பதைக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் யாழ் குப்பத்து மீனவர்கள். மழையில் வெள்ளத்திலும் கோடையில் அனலிலும் ஓலைக் குடிசையில் வாழும் அவர்களுக்கு சொந்தமாக வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்பது அந்த குப்பத்து இளைஞன் சுறாவின் ஆசை. குப்பத்து மக்களுக்கு எல்லாமும் அவர்தான். அவர் விரல் நீட்டும் திசைநோக்கி நடப்பார்கள். வீட்டுப் பிரச்னையிலிருந்து ஊர் பிரச்னை வரை தீர்த்து வைப்பதும் சுறாதான். வீடுகட்டும் கனவில் சுறா மிதந்து கொண்டிருக்கும்போது வில்லன் ரூபத்தில் வருகிறது பிரச்னை. புறம்போக்கு நிலமான யாழ் குப்பத்தை வளைத்துப்போட்டு அதில் வேடிக்கை விளையாட்டு பூங்கா அமைக்க ஆசைப்படுகிறார் வில்லன் தேவ் கில். அதிகாரம், ஆள், பணம் என்ற முப்பெரும் பலம் வாய்ந்த மந்திரி, அதற்கு தடையாக இருக்கும் சுறாவை அழிக்க ஆள் அனுப்புகிறார். அது முடியாமல் போகவே, குப்பத்துக்கு தீவைத்து சாம்பலாக்குகிறார். அந்த நெருப்பில் சுறாவையும் தள்ளி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார். நெருப்பிலிருந்து உயிர்தெழும் ஃபீனிக்ஸ் பறவை போன்று சுறா, அந்த நெருப்பிலிருந்து புதிதாக புறப்பட்டு வருகிறார். அந்த பக்கம் பண முதலையும், இந்த பக்கம் சூறாவளி சுறாவும் நிற்கிறார்கள். அப்புறம் ஆரம்பிக்கும் ஆக்ஷன் சுனாமி, அதிரடி சரவெடி. புயலால் நடுக்கடலில் சிக்கிய மீனவர்களை காப்பாற்றிய சுறா, கடலில் மூழ்கிவிட, மக்கள் கரையில் பரிதவித்து நிற்கும்போது நீந்தியே கரையேறும் சுறா விஜய்யின் அறிமுகமே அமர்க்களமாக துவங்குகிறது. அம்மாவிடம் அன்பு, மீனவ மக்களிடம் பணிவு, எதிரிகளிடம் கடுமை, தமன்னாவிடம் காதல், வடிவேலுவிடம் காமெடி என வெரைட்டி மீல்ஸ் பரிமாறுகிறார் விஜய். அம்மாவுக்கு தானே மீன் குழம்பு வைத்து சாப்பாடு போடுவதில் அன்பு தெரிகிறது. ரேஷன் கார்டை அடகுவைத்து குடிக்கும் குடிமகனை திருத்தி அவன் மனைவியிடம் ஒப்படைக்கும்போது கனிவு தெரிகிறது. தமன்னா கடத்தப்பட்ட மறுநிமிடமே வில்லன் வீட்டு வாசலில் நிற்கும்போது காதல் தெரிகிறது. ‘நீ நினைக்கிற மாதிரி நான் புறா இல்லடா சுறா’ என்று வில்லனிடம் அதிரும்போது கடுமை தெரிகிறது. காதலி வீட்டு மாடி ஏற ஏணி கொடுத்து உதவும் வடிவேலுவிடம், ‘அண்ணா உங்களுக்கு ரொம்ப பெரிய மனசுங்கன்ணா’ என்று திரும்ப திரும்ப கூறும்போது காமெடி தெரிகிறது. இப்படி ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்கான அத்தனை பரிமாணங்களையும் வெளிப்படுத்தியிருப்பதில் விஜய்யின் முழு திறமையும் தெரிகிறது. இதுவரை தனி நபர்களுக்காக போராடி வந்த விஜய், இந்த படத்தில் மக்களுக்கான போராட்டத்தை நடத்துகிறார். அதனால் சமூககேடுகளை ஆங்காங்கே புட்டு புட்டு வைக்கிறார். ரேஷன் கார்டை அடகு வாங்கும் கந்துவட்டிக்காரன், ஆசை நாயகி வீட்டில் தங்கும் போலீஸ் அதிகாரி, கொடுத்த வாக்கை காப்பாற்றாத அரசியல்வாதி, பொய்யை நம்பி வாதாடும் வழக்கறிஞர், அரசியல்வாதிக்கு அடிபணிந்து போகும் அதிகாரி என போகிற போக்கில் பொறிதட்ட புரட்டிவிட்டுப்போகிறார். அனல் பறக்கும் வசனங்களும், பரபரக்கும் பஞ்ச் டயலாக்குகளும் கைதட்டலை அள்ளிச் செல்கிறது. துவக்கப்பாடலில் இருந்து வெளிநாட்டு டூயட் வரைக்கும் விஜய்யின் நடன அசைவுகளை, நடனம் பயில்பவர்களுக்கு பாடமாக வைக்கலாம். குறிப்பாக ‘தஞ்சாவூரு ஜில்லாக்காரியில்...’ அவரின் புதுமையான நடன அசைவுகளின்போது இமைகள் இமைக்க மறுக்கிறது. ‘நான் செத்த பிறகு, என் உடம்பை மீடியாலாம் போட்டோ எடுக்கும். அப்போ என் முகம் டல்லாயிடக் கூடாதில்ல’ என்று தற்கொலைக்கு முன், மேக்&அப் போட்டதின் காரணத்தை சொல்வதிலிருந்து ஆரம்பமாகிறது தமன்னாவின் கலாட்டா. தூக்குப்போட்டு தற்கொலை செய்யும்போது செல்ல நாய்க்கும் தூக்கு கயிறு ரெடி பண்ணி வைப்பது என்று தமன்னா இதுவரை காட்டாத காமெடி முகம் கலர்புல் கலகலப்பு. காஷ்மீர் ஆப்பிள் மாதிரியான தமன்னா கடல் சுறாவை காதலித்து கனவுகளில் ஆடும் டூயட்டுகள் கோடைக்காலத்துக்கேற்ற குளிர்ச்சி ஏரியாக்கள். ‘சிறகடிக்கும் நிலவு...’ பாடலில் தமன்னாவின் அசைவுகள் கிக் டைப். ஜாலி டூயட்டும், டப்பாங்குத்துமாக படத்துக்கு இசையலங்காரம் செய்திருக்கிறார் மணிசர்மா. தனது குடோனில் அந்நியன் ஒருவன் நுழைந்திருப்பதை வாசனையை வைத்தே உணரும் அதிரடி வில்லனாக அறிமுகமாகியிருக்கிறார் தேவ் கில். ஒவ்வொரு முறையும் வீரத்துடன் திட்டம் போடுவதும், அவை தோற்கும்போது ஆத்திரத்தில் அலறுவதிலுமாக வில்லன் வேலையை கச்சிதமாக செய்கிறார். ‘பருத்தி வீரன்’ சுஜாதாவுக்கு ஹீரோவின் அம்மாவாக புரமோஷன் கிடைத்திருக்கிறது. அந்த கால சுஜாதா இல்லாத குறையை போக்கியிருக்கிறார். படத்தின் இன்னொரு ஹீரோ என்று வடிவேலுவைச் சொல்லலாம். அந்த அளவுக்கு காமெடி காக்டெய்ல் விருந்து வைக்கிறார். காலையில் நடக்கும் படகுபோட்டிக்கு மாலையில் போய் சேர்வதில் தொடங்குகிறது அவரது அலப்பறை. கடலில் குதித்து தண்ணீர் குடித்து மயங்கிக் கிடக்கும் தமன்னா வயிற்றை அமுக்கி, தண்ணீரை வெளியேற்ற விஜய் முயற்சிக்கிறார். ‘இந்த புனித பணியில என் பங்கும் இருக்கணும்னு விரும்புறேன்’ என்று வடிவேலும் உதவப்போக, திடீரென விழிக்கும் தமன்னா, ‘இது என்ன தண்ணீர் தொட்டியா?‘ என்று வயிற்றை காட்ட சிரிப்பில் அலறுகிறது தியேட்டர். இப்படி காட்சிக்கு காட்சி வடிவேலுவின் ‘வெடிவேலு’ அவதாரம் அதிகம். மீனவர்களுக்கு வீடுகட்ட, வில்லனின் கடத்தல் கப்பலையே மும்பைக்கு லவட்டிக் கொண்டுபோய் 100 கோடி ரூபாய் சம்பாதிப்பது, குடியிருந்த இடத்துக்கு கலெக்டர் ஆதாரம் கேட்கும்போது யாரும் எதிர்பாராத வகையில் அதை கச்சிதமாக எடுத்துக் கொடுப்பது, புதிய வீடுகளை தகர்க்க குண்டு வைத்து விட்டு விஜய்யை கட்டி வைத்து அடித்து கொக்கரிக்கும்போது வில்லனுக்கு விஜய் கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட் என்று இயக்குனர் எஸ்.பி.ராஜகுமாரின் விறுவிறு திரைக்கதையும், இயக்கமும் படத்தை டாப் கீயரில் கொண்டு செல்கிறது. மணிசர்மாவின் பின்னணி இசையும், ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவும் படத்தின் வேகத்துக்கு சக்கரமாக உதவியிருக்கிறது.

No comments:

Post a Comment