ஹாலிவுட் கவ்பாய் பாணியிலான படத்தை உல்டாவாக்கி, சிம்புதேவன் கட்டியிருக்கும் காமெடிக் கோட்டை. சுற்றுப்பத்து பதினாறு கிராமங்களை அடிமையாக்கி அக்கிரம ஆட்சி நடத்துகிறார் இரும்புக்கோட்டை அதிபர் நாசர். அவருக்கு சிம்ம சொப்பனமாகவும், கிராமத்து மக்களுக்கு காட்பாதராகவும் இருக்கிறார் சிங்கம் லாரன்ஸ். அவரை சதி செய்து நாசர் தீர்த்துக் கட்ட, ஜெய்சங்கர்புரத்து மக்கள் லாரன்சை போன்ற தோற்றமுள்ள இன்னொரு லாரன்சை கடத்துகிறார்கள். நிஜ சிங்கத்தை போன்று உருமாற்றி நாசர் கூட்டத்துக்கு கிலியை உண்டாக்குகிறார்கள். புதிதாக முரட்டு சிங்கமாக வந்த லாரன்ஸ், நாசர் கூட்டத்தை அடக்கி இரும்புக்கோட்டையை கைப்பற்றுகிறாரா என்பது மீதிக் கதை.
தாடி, பெரிய தொப்பி, தோல் காஸ்டியூம் என கவ்பாயாக மாறியுள்ளார் லாரன்ஸ். அநாயசமான துப்பாக்கி சுழற்றலும், அட்டகாசமான நடன அசைவும் என ஸ்கோர் செய்கிறார். ஜெய்சங்கர்புரத்து பத்மப்ரியா, செவ்விந்தியர்கள் இளவரசி சந்தியா, இரும்புக்கோட்டை ராணி லட்சுமிராய் மூவரில் பத்மப்ரியா மனதை கவர்கிறார். சந்தியா வித்தியாசமான கெட்&அப்பில் வருகிறார். லட்சுமிராய் வழக்கம்போல கிளாமராய் வருகிறார். துப்பாக்கி சண்டை, குதிரை துரத்தல், புதையலைத் தேடிய பயணம், மனிதர்களை சமைத்து உண்ணும் செவ்விந்தியர்கள் என ஹாலிவுட் படங்களில் பார்த்த காட்சிகளுக்கு புது பாலிஷ் போட்டு பதிவு செய்திருக்கிறார்கள். கமெடியை விட பிரமாண்ட செட்களை ரசிக்கலாம்.
ஒற்றைக்கண் நாசர், செவ்விந்தியர்களின் தலைவர் எம்.எஸ்.பாஸ்கர், மத தலைவர் செந்தில், லாரன்சின் நண்பர்கள் இளவரசு, வையாபுரி, மவுலி, ரமேஷ் கண்ணா இப்படி பார்த்து பழகிய முகங்கள் வித்தியாசமான தோற்றத்தில் வலம் வருவது புதுசு. டி.முத்துராஜின் கலை இயக்கம் படத்தை பேன்டஸியாக்குகிறது. முழு காமெடி படமாக செல்ல வேண்டிய கதையை பிரமாண்டங்களில் மூழ்க வைத்திருக்கிறார் சிம்புதேவன். லாஜிக் பார்க்கக் கூடாத காமெடி படம்தான். ஆனாலும் 18&வது நூற்றாண்டில் நடக்கும் கதையென சொல்லிவிட்டு எம்.ஜி.ஆர், மேஜர் சுந்தர்ராஜனையெல்லாம் காட்டுகிற அளவுக்கு லாஜிக்கை மேஜிக் ஆக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுவதை தடுக்க முடியவில்லை.
மொத்தத்தில் 'இரும்புக்கோட்டை முரட்டுசிங்கம்' 'காமெடிக் கோட்டை'
Connecting Tamil Peoples.......... Tamil 3gp videos and Ringtones Download free, Comedy Videos, Actress Videos, Actor Videos, god Ringtones Download Free
சிங்கம்
தூத்துக்குடி மாவட்டம், நல்லூர் சப் இன்ஸ்பெக்டர் சூர்யா. சென்னையில் நடந்த கொலை வழக்கில் கைதாகும் பிரகாஷ் ராஜுக்கு, நல்லூர் ஸ்டேஷனில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை ஜாமின் அளிக்கிறது கோர்ட். வேறு ஆளை ஏற்பாடு செய்து கையெழுத்து போட வைக்கிறார் பி.ராஜ். இதை கண்டுபிடிக்கும் சூர்யா, ‘அவரு வந்து கையெழுத்து போடணும்; இல்னைன்னா இங்க இருந்தபடியே, அவனை தூக்கி உள்ளே வச்சுடுவேன்’ என்று கண்டிக்கிறார். அவசர அவசரமாக கிளம்பி வரும் பி.ராஜ், சூர்யாவை மிரட்டுகிறார். அவரது ஒவ்வொரு மிரட்டலுக்கும் ஊர்மக்கள் பதிலடி கொடுக்கின்றனர். வேறுவழியில்லாமல் பணிந்துபோகிறார். ஒரு கட்டத்தில், இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு கொடுத்து, தன் ஏரியாவான சென்னை திருவான்மியூருக்கு வரவழைக்கிறார் பி.ராஜ். பிறகு தொடங்குவது தகதகக்கும் ஆக்ஷன் மேளா.
காக்கி சட்டைக்கு பொருத்தமான நடிகர்கள் பட்டியலில் மீண்டும் தனது பெயரை உறுதி செய்திருக்கிறார் சூர்யா. விரைப்பான பார்வை, கம்பீரமான நடை, பொறி பறக்கும் ஆக்ஷன் என அனைத்து ஏரியாவிலும் அமர்க்களப்படுத்தும் சூர்யா, ரசிகர்களின் மனங்களை அள்ளுகிறார். ஊர்க்காரர்களின் சின்ன சின்ன சண்டைகளை பெரிசுபடுத்தாமல், அவர்களை கைகொடுக்க வைத்து, சமரசம் செய்து அனுப்புவது, ‘ஊர்ல எல்லாரும் பங்காளிங்கதான். கேஸை போட்டு அவங்களை அலைய வைக்க மனசு கேட்க மாட்டேங்குது’ என்று அவர்களை மனிதாபிமானத்தோடு பார்க்கும் போது நமக்கும் பாசம் வந்துவிடுகிறது. புலி வேடம் போட்டுக்கொண்டு செல்லும் அனுஷ்காவுக்கு, சூர்யா பளார் விடுவதும், பிறகு, ‘பொம்பளைன்னு தெரியாம அடிச்சுட்டேன்; மன்னிச்சுக்கோங்க. பதிலுக்கு நீங்க வேணா, என்னை அடிச்சுக்குங்க, யாரும் பார்க்காத மாதிரி அடிச்சீங்கன்னா, போலீசுங்கற மரியாதை இருக்கும்” என்றும் சொல்வதும் அந்த இடத்திலேயே அனுஷ்கா, சரண்டர் ஆவதும் இதம்.
வேண்டுமென்றே, ‘அது தொலைஞ்சுபோச்சு, இது காணாம போயிடுச்சு’ என்று ஸ்டேஷனுக்கு வரும் அனுஷ்காவின் காதல், அழகான கிராமத்து கவிதை. ‘என்னை விட்டுட்டு வேற யாரையாவது கல்யாணம் பண்ணினே, ரூம் போட்டு மேட்டரை முடிச்சுட்டேன்னு சொல்லிருவேன்’ என்று அனுஷ்கா மிரட்டும்போது, தியேட்டரில் விசில் பறக்கிறது. வில்லத்தனத்தில் மிரட்டுகிறார் பிரகாஷ்ராஜ். ‘கில்லி’க்கு பிறகு அவரது அபார நடிப்பில் அக்னி வெயில். பணக்காரர்களின் வாரிசுகளை கடத்தி வைத்துக்கொண்டு பணத்துக்காக மிரட்டுவதும் புதிதாக கட்டிடம் கட்டுபவர்களிடம் மாமூல் தரும்படி வற்புறுத்துவதுமாக அசல் தாதாவாகியிருக்கிறார். ‘அட்ரசே இல்லாத ஊர்ல உட்கார்ந்துகிட்டு என்னைய மிரட்றியா?’ என சூர்யாவை பி.ராஜ் எச்சரிக்க, போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியே திரளும் ஊர்க்காரர்கள், கார்களை துவம்சம் செய்வது அமர்க்களம். சென்னைக்கு மாற்றல் ஆகிவரும் சூர்யாவிடம் பி.ராஜ் தொடங்கும் நேருக்கு நேர் மோதல் ஜிவ்வென எகிறுகிறது.
பதவி ஏற்க வந்த முதல்நாளே சூர்யாவை சந்திக்க வரும் பி.ராஜ், ‘உன்னை சும்மா விடமாட்டேன்டா? குடைச்சல் கொடுத்துகிட்டே இருப்பேன்’ என்று சவால்விடுவதும் அவருக்கு உடந்தையாக உயர் அதிகாரி நிழல்கள் ரவி நடந்துகொள்வதுமாக பரபரக்கிறது காட்சிகள். ‘இவங்ககளோட நான் மோத விரும்பலை. ஊருக்கே திரும்ப போறேன்’ என்று காதலி அனுஷ்காவிடம் சூர்யா சொல்வதும், ‘மனைவி வேண்டுமானா, பிரச்னைகளை கண்டு தன்னோட கணவன் ஒதுங்கி போனா நல்லதுன்னு நினைக்கலாம், காதலி அதை விரும்ப மாட்டா’ என்று அவர் தரும் நம்பிக்கையில், காதை பிளக்கிறது கைதட்டல்.
‘எரிமலை எப்படி பொறுக்கும்’ என்ற பாடல் பின்னணியில் விவேக் அடிக்கும் லூட்டிகள் கலக்கல் காமெடி. சூர்யா பாணியில் பஞ்சாயத்து செய்து பிரச்னைகளை தீர்ப்பதாக சொல்லி, இன்னொருவர் மனைவியை மற்றொருவருடன் ஓட விடுவது, ஸ்டேஷனில் காமெடியனை விசாரிக்கும்போது, விழும் உதையில், நடுரோட்டில் மின்கம்பத்தில் மோதி ‘பல்ப்’ ஐ உடைப்பது என விலா நோக சிரிக்க வைக்கிறார் விவேக்.
விரைப்பான தொழிலதிபராக வரும் நாசர், சூர்யாவின் அப்பாவாக வரும் ராதாரவி, ‘எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்’ என்று அப்பாவியாக வரும் பாண்டு, பிரகாஷ் ராஜின் அடியாளாக வரும் ஆதித்யா, கிரேன் மனோகர், தியாகு என ஒவ்வொருவரும் கேரக்டரோடு பொருந்துகிறார்கள்.
பிரியனின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு பிரேமும் கண்ணாடியாக பளபளக்கிறது. தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்கு பலமாகியிருக்கிறது. பரபரக்கும் திரைக்கதை, மின்னல் வேக ஆக்ஷன் காட்சிகள் என, பக்காவான படத்தை தந்திருக்கும் இயக்குனர் ஹரியை, எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
சுறா
இருப்பதைக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் யாழ் குப்பத்து மீனவர்கள். மழையில் வெள்ளத்திலும் கோடையில் அனலிலும் ஓலைக் குடிசையில் வாழும் அவர்களுக்கு சொந்தமாக வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்பது அந்த குப்பத்து இளைஞன் சுறாவின் ஆசை. குப்பத்து மக்களுக்கு எல்லாமும் அவர்தான். அவர் விரல் நீட்டும் திசைநோக்கி நடப்பார்கள். வீட்டுப் பிரச்னையிலிருந்து ஊர் பிரச்னை வரை தீர்த்து வைப்பதும் சுறாதான். வீடுகட்டும் கனவில் சுறா மிதந்து கொண்டிருக்கும்போது வில்லன் ரூபத்தில் வருகிறது பிரச்னை. புறம்போக்கு நிலமான யாழ் குப்பத்தை வளைத்துப்போட்டு அதில் வேடிக்கை விளையாட்டு பூங்கா அமைக்க ஆசைப்படுகிறார் வில்லன் தேவ் கில். அதிகாரம், ஆள், பணம் என்ற முப்பெரும் பலம் வாய்ந்த மந்திரி, அதற்கு தடையாக இருக்கும் சுறாவை அழிக்க ஆள் அனுப்புகிறார். அது முடியாமல் போகவே, குப்பத்துக்கு தீவைத்து சாம்பலாக்குகிறார். அந்த நெருப்பில் சுறாவையும் தள்ளி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார். நெருப்பிலிருந்து உயிர்தெழும் ஃபீனிக்ஸ் பறவை போன்று சுறா, அந்த நெருப்பிலிருந்து புதிதாக புறப்பட்டு வருகிறார். அந்த பக்கம் பண முதலையும், இந்த பக்கம் சூறாவளி சுறாவும் நிற்கிறார்கள். அப்புறம் ஆரம்பிக்கும் ஆக்ஷன் சுனாமி, அதிரடி சரவெடி. புயலால் நடுக்கடலில் சிக்கிய மீனவர்களை காப்பாற்றிய சுறா, கடலில் மூழ்கிவிட, மக்கள் கரையில் பரிதவித்து நிற்கும்போது நீந்தியே கரையேறும் சுறா விஜய்யின் அறிமுகமே அமர்க்களமாக துவங்குகிறது. அம்மாவிடம் அன்பு, மீனவ மக்களிடம் பணிவு, எதிரிகளிடம் கடுமை, தமன்னாவிடம் காதல், வடிவேலுவிடம் காமெடி என வெரைட்டி மீல்ஸ் பரிமாறுகிறார் விஜய். அம்மாவுக்கு தானே மீன் குழம்பு வைத்து சாப்பாடு போடுவதில் அன்பு தெரிகிறது. ரேஷன் கார்டை அடகுவைத்து குடிக்கும் குடிமகனை திருத்தி அவன் மனைவியிடம் ஒப்படைக்கும்போது கனிவு தெரிகிறது. தமன்னா கடத்தப்பட்ட மறுநிமிடமே வில்லன் வீட்டு வாசலில் நிற்கும்போது காதல் தெரிகிறது. ‘நீ நினைக்கிற மாதிரி நான் புறா இல்லடா சுறா’ என்று வில்லனிடம் அதிரும்போது கடுமை தெரிகிறது. காதலி வீட்டு மாடி ஏற ஏணி கொடுத்து உதவும் வடிவேலுவிடம், ‘அண்ணா உங்களுக்கு ரொம்ப பெரிய மனசுங்கன்ணா’ என்று திரும்ப திரும்ப கூறும்போது காமெடி தெரிகிறது. இப்படி ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்கான அத்தனை பரிமாணங்களையும் வெளிப்படுத்தியிருப்பதில் விஜய்யின் முழு திறமையும் தெரிகிறது. இதுவரை தனி நபர்களுக்காக போராடி வந்த விஜய், இந்த படத்தில் மக்களுக்கான போராட்டத்தை நடத்துகிறார். அதனால் சமூககேடுகளை ஆங்காங்கே புட்டு புட்டு வைக்கிறார். ரேஷன் கார்டை அடகு வாங்கும் கந்துவட்டிக்காரன், ஆசை நாயகி வீட்டில் தங்கும் போலீஸ் அதிகாரி, கொடுத்த வாக்கை காப்பாற்றாத அரசியல்வாதி, பொய்யை நம்பி வாதாடும் வழக்கறிஞர், அரசியல்வாதிக்கு அடிபணிந்து போகும் அதிகாரி என போகிற போக்கில் பொறிதட்ட புரட்டிவிட்டுப்போகிறார். அனல் பறக்கும் வசனங்களும், பரபரக்கும் பஞ்ச் டயலாக்குகளும் கைதட்டலை அள்ளிச் செல்கிறது. துவக்கப்பாடலில் இருந்து வெளிநாட்டு டூயட் வரைக்கும் விஜய்யின் நடன அசைவுகளை, நடனம் பயில்பவர்களுக்கு பாடமாக வைக்கலாம். குறிப்பாக ‘தஞ்சாவூரு ஜில்லாக்காரியில்...’ அவரின் புதுமையான நடன அசைவுகளின்போது இமைகள் இமைக்க மறுக்கிறது. ‘நான் செத்த பிறகு, என் உடம்பை மீடியாலாம் போட்டோ எடுக்கும். அப்போ என் முகம் டல்லாயிடக் கூடாதில்ல’ என்று தற்கொலைக்கு முன், மேக்&அப் போட்டதின் காரணத்தை சொல்வதிலிருந்து ஆரம்பமாகிறது தமன்னாவின் கலாட்டா. தூக்குப்போட்டு தற்கொலை செய்யும்போது செல்ல நாய்க்கும் தூக்கு கயிறு ரெடி பண்ணி வைப்பது என்று தமன்னா இதுவரை காட்டாத காமெடி முகம் கலர்புல் கலகலப்பு. காஷ்மீர் ஆப்பிள் மாதிரியான தமன்னா கடல் சுறாவை காதலித்து கனவுகளில் ஆடும் டூயட்டுகள் கோடைக்காலத்துக்கேற்ற குளிர்ச்சி ஏரியாக்கள். ‘சிறகடிக்கும் நிலவு...’ பாடலில் தமன்னாவின் அசைவுகள் கிக் டைப். ஜாலி டூயட்டும், டப்பாங்குத்துமாக படத்துக்கு இசையலங்காரம் செய்திருக்கிறார் மணிசர்மா. தனது குடோனில் அந்நியன் ஒருவன் நுழைந்திருப்பதை வாசனையை வைத்தே உணரும் அதிரடி வில்லனாக அறிமுகமாகியிருக்கிறார் தேவ் கில். ஒவ்வொரு முறையும் வீரத்துடன் திட்டம் போடுவதும், அவை தோற்கும்போது ஆத்திரத்தில் அலறுவதிலுமாக வில்லன் வேலையை கச்சிதமாக செய்கிறார். ‘பருத்தி வீரன்’ சுஜாதாவுக்கு ஹீரோவின் அம்மாவாக புரமோஷன் கிடைத்திருக்கிறது. அந்த கால சுஜாதா இல்லாத குறையை போக்கியிருக்கிறார். படத்தின் இன்னொரு ஹீரோ என்று வடிவேலுவைச் சொல்லலாம். அந்த அளவுக்கு காமெடி காக்டெய்ல் விருந்து வைக்கிறார். காலையில் நடக்கும் படகுபோட்டிக்கு மாலையில் போய் சேர்வதில் தொடங்குகிறது அவரது அலப்பறை. கடலில் குதித்து தண்ணீர் குடித்து மயங்கிக் கிடக்கும் தமன்னா வயிற்றை அமுக்கி, தண்ணீரை வெளியேற்ற விஜய் முயற்சிக்கிறார். ‘இந்த புனித பணியில என் பங்கும் இருக்கணும்னு விரும்புறேன்’ என்று வடிவேலும் உதவப்போக, திடீரென விழிக்கும் தமன்னா, ‘இது என்ன தண்ணீர் தொட்டியா?‘ என்று வயிற்றை காட்ட சிரிப்பில் அலறுகிறது தியேட்டர். இப்படி காட்சிக்கு காட்சி வடிவேலுவின் ‘வெடிவேலு’ அவதாரம் அதிகம். மீனவர்களுக்கு வீடுகட்ட, வில்லனின் கடத்தல் கப்பலையே மும்பைக்கு லவட்டிக் கொண்டுபோய் 100 கோடி ரூபாய் சம்பாதிப்பது, குடியிருந்த இடத்துக்கு கலெக்டர் ஆதாரம் கேட்கும்போது யாரும் எதிர்பாராத வகையில் அதை கச்சிதமாக எடுத்துக் கொடுப்பது, புதிய வீடுகளை தகர்க்க குண்டு வைத்து விட்டு விஜய்யை கட்டி வைத்து அடித்து கொக்கரிக்கும்போது வில்லனுக்கு விஜய் கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட் என்று இயக்குனர் எஸ்.பி.ராஜகுமாரின் விறுவிறு திரைக்கதையும், இயக்கமும் படத்தை டாப் கீயரில் கொண்டு செல்கிறது. மணிசர்மாவின் பின்னணி இசையும், ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவும் படத்தின் வேகத்துக்கு சக்கரமாக உதவியிருக்கிறது.
Subscribe to:
Posts (Atom)